Showing posts with label Dinamalar. Show all posts
Showing posts with label Dinamalar. Show all posts

Wednesday, December 21, 2011

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!


இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்து , எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக நடந்து கொண்டால்  சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள். 

Monday, December 5, 2011

வரலாறு உன்னை வாழ்த்தட்டும்


* பிறர் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரிவதில் இருந்து தவறமாட்டார். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழக்கூடாது.

* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

* எல்லா உயிர்களும் தெய்வம் என்பது உண்மையே. ஆனால், அனைத்திலும் உயர்ந்த தெய்வம் மனிதனே.

* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்கே திருமகளின் அருள் கிடைக்கும்.

* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவு தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம். இது தூங்குவதற்கான தருணம் அல்ல.

* ஆணோ பெண்ணோ, வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தன்னம்பிக்கை தான். என்னால் இயலாது என்று சொல்பவர்கள் வரலாற்று புத்தகத்தைக் கூட தொடுவதற்கு தகுதியற்றவர்கள்.

- விவேகானந்தர்

கை கொடுப்போமா...


நவ., 15ம் தேதி,
ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊன முற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.
அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!
காரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது
"வா தாயி...' என்று உட்கார வைத்து, "உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...

"எனக்கு சொந்த ஊர் கமுதி அருகே உள்ள எருமைக்குளம். அப்பா முத்துராமலிங்கம், அம்மா கிருஷ்ணம்மாள். எங்க அம்மாதான் காட்டிலே போய் விறகு பொறுக்கி வந்து, அதை விற்று வர்ற காசுலதான் கஞ்சி காய்ச்சி, சாப்பாடு போடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. எனக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம்.

எங்க அப்பா எந்த வேலைக்கும் போனதில்ல. எப்பவும் குடிச்சுட்டு வந்து அம்மாகிட்ட தகராறு செய்து, அடிச்சுக்கிட்டே இருப்பாரு. ஒரு நாள் குடிவெறியால அம்மாவை அரிவாளால வெட்ட வந்தாரு. நான் குறுக்கே பாய்ந்து வலது கையால தடுத்தேன். கை துண்டாப் போனது மட்டு மில்லாமல், என் அம்மாவோட தலையிலும், தோள்லேயும் கூட வெட்டு விழுந்துச்சு. அப்பா ஓடிப் போயிட்டாரு.

அக்கம், பக்கம் இருந்தவங்க என்னையும், அம்மாவையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க. "முறைப்படி' கொண்டு வராததாலே, கையை திரும்ப சேர்க்க முடியாம போச்சுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும், என் அம்மாவை காப்பாத்திட்டேன். இனியும், நல்லா காப்பாத்தணுங்கிறதுனால தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன்; ஆனால், கையில காசில்லை.

பிறகு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் வழிகாட்டியதில், இப்ப நான் ராமநாத புரத்தில் உள்ள ஆஞ்சலோ காப்பகத்தில் தங்கியிருக்கேன். இங்குள்ள புனித ஆந்திரேயா பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறேன்.
அம்மா, விறகு பொறுக்கி வர்ற காசுல என்னை படிக்க வைக்கிறாங்க. ஆஞ்சலோ காப்பகம் சதானந்தம் ஐயா, ஆசிரியர் செபாஸ்டின் ஐயா ஆகியோர் எனக்கு வேணுங்கிறதை செய்து தர்றாங்க.

எதிர்காலத்துல குடிக்கறவங்களே இருக்கக் கூடாது. அதுக்கான படிப்பு படிச்சு, எல்லாரரையும் திருத்துவேன். இப்ப என்னோட ஆசை, ஆரம்பத்துல இருந்தே கை இல்லாம இருந்தா பரவாயில்லை. கை இருந்துட்டு, திடீர்ன்னு இல்லைன்னு ஆயிட்டதாலே ரொம்ப சிரமமாயிருக்கு. செயற்கை கை பத்தி நிறைய சொல்றாங்க. அதுல ஓண்ணு இலவசமா மாட்டிவிட முடியுமாங்கய்யா? " என்று சொல்லி முடித்த தனலட்சுமி யின் கேவலுக்கும், கேள்விக்கும் பதில் கொடுக்க விரும்பு பவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: சதானந்தம் - 9786713264, செபாஸ்டின்-94420 48565.

Wednesday, November 30, 2011

தெய்வசிந்தனையில் மூழ்கு!


* உலக வாழ்க்கை பொய், செல்வமும் சுற்றமும் இளைமையும் நிலையானது அல்ல. இதை உணர்ந்து ஆன்மிக வாழ்க்கையில் இறங்குங்கள்.

* குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவதுடன், மனதை அடக்குவதன் மூலமே இதயத்தில் இருக்கும் இறைவனைக் காணலாம்.

* மனம் அலையாதிருக்கவும், ஆன்மிக சிந்தனை நிலைத்து நிற்கவும், ஆசையை அடக்கவும் பிரார்த்தனையின் போது தியானம் செய்.

* உறவு, செல்வம், இளமை இவை அனைத்தையும் காலன் ஒரு கணத்தில் விழுங்கி விடுவதால் பொய்யானவற்றை துறந்து விடு. இறைவனை முழுமையாக நம்பி அவனது சிந்தனையில் மூழ்கிவிடு.

* ஒளியின்றி எந்தப் பொருளையும் பார்க்க முடியாது, அதேபோல் ஆன்மிகப்பயிற்சியின்றி, வேறு எந்த விதத்திலும் ஞானம் உதிக்காது.

* பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததைக் கொண்டு திருப்தியடை.

- ஆதிசங்கரர்