Wednesday, December 21, 2011

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!


இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்து , எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக நடந்து கொண்டால்  சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள். 

Tuesday, December 13, 2011

குஜராத் முதல்வரைச் சந்தித்தோம் - –‘டிவி’ வரதராஜன்



அஹமதாபாத்தில் கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எங்கள் குழுவின் இரண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அஹமதாபாத்தில் இருக்கும்போது முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க நானும், எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களும் விரும்பினோம். இ-மெயில் மூலமாகவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம். உடனேயே அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டது! நம்மூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. திருப்புகழ், நரேந்திர மோடியுடன் இருக்கிறார் என்பதால், அவரும் உதவ எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது மிகவும் சுலபமாகி விட்டது. ஒரு முதல்வரை இவ்வளவு எளிதில் சந்திக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.



13.11.2011 மதியம் 12 மணிக்கு நாங்கள் மோடி அவர்களைச் சந்தித்தோம். எங்களுடன் ஒரு ஃபோட்டோகிராஃபரையும், வீடியோ கிராஃபரையும் கூட அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்து விட்டார்கள். போகும்பொழுது எங்களுக்கு ஒரு சந்தேகம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபொழுது ‘வணக்கம்’ என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்தபடியே வந்து கொண்டிருந்தார். ‘ஸ்வாகதம்’ என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும், அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.




 

எங்களுடைய நாடகங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருகிறார்கள். ஆகவே, தமிழ் நாடகங்களின் விழா ஒன்றை தமிழ்ப் புத்தாண்டு தின சமயத்தில் குஜராத் மாநில அரசின் சார்பாக நடத்த வேண்டும்’ என்று நாங்கள் கேட்டபொழுது, நிச்சயமாக அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உடனே கூறிவிட்டார். தனது சாணக்கியத்தனத்தாலும், சாதுரியத்தாலும், சீரிய தலைமையாலும் அனைவரையும் வென்று வரும் நரேந்திர மோடி அவர்கள், எங்களை அவருடைய ஆத்மார்த்தமான அன்பினால் வென்று விட்டார். மோடியை நாங்கள் சந்தித்தோம் என்று தெரிந்த பிறகு, குஜராத் மாநிலத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஒரு தனி மரியாதை கிட்டியது. நரேந்திர மோடியுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, ‘நீங்கள் வருகிறபோது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?’ என்று கேட்டார், ‘நாங்கள் அப்படி எதுவும் இல்லை’ என்றோம்.

ஆனால் ‘என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அதுதான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்’ என்று அவர் விளக்கினார். நம் ஊரில் கார்ப்பரேஷன் கௌன்ஸிலரைக் கூட இவ்வளவு சுலபமாக, தொந்திரவு இல்லாமல் பார்த்து விட முடியாது என்று எங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டோம்.

ரயில் பயணத்தின்போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதுவரை சாதாரணமாக ஒன்றும் குறிப்பிடத்தக்க நிலையில் இல்லாத கிராமங்களை ரயில் கடந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், குஜராத்தில் நுழைந்தபோதோ, எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமாக விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குஜராத்தில் நாங்கள் கார்களில் பயணம் செய்தபொழுது, அங்கு தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமதாபாத்திலும் சரி, சூரத்திலும் சரி, நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம் இனமக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், ‘மோடியினால்தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்’ என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும்; நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், ‘இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்... நாங்கள் செய்த புண்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்...’ என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

சூரத் நகரம் புடவைகள் மற்றும் வைரங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடம். அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் புழங்குகின்ற இடம். தினமும் மூட்டை மூட்டையாகத் துணிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக, ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் மற்றும் லாரி நிறுவனங்களுக்கு தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். இது அனேகமாக நாள் முழுவதும் நடக்கிறது. அவ்வளவு வியாபாரம். அந்த மாதிரி மூட்டைகளைச் சுமந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வேறு ஒருவரின் உதவியோடு பேச்சுக் கொடுத்தேன். ‘மூட்டை தூக்குவதால் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்’ என்று கேட்டேன்.

சராசரியாக 500 முதல் 700 ரூபாய் வரை வரும்’ என்ற அந்த மூட்டை சுமப்பவர் பதிலளித்தார்.

எவ்வளவு பணம் வீட்டுக்குச் செல்லும்’ என்று கேட்டேன்.

என் செலவுக்கு 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.

100 ரூபாய்தானா?

ஆமாம், காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். பகலில் சாப்பிடவும், மற்றும் பான் பராக் போட்டுக் கொள்ளவும் 100 ரூபாய் போதாதா? போதும்’ என்றார்.

சரி, குடும்பம் எப்படி இருக்கிறது?’ என்றேன்.

மகன் பட்டப்படிப்பும், மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மனைவி ஒரு கடையில் வேலை செய்கிறாள்’ என்றார்.

இது ஒரு சாம்பிள்தான். அனேகமாக குஜராத்தில் பலரும் இதே ஸ்டாண்டர்டில்தான் வாழ்கிறார்கள். அப்புறம் அங்குள்ளவர்கள் விளக்கிச் சொல்லத்தான், இது இங்கே எப்படி சாத்தியமாயிற்று என்பது புரிந்தது. ‘இங்கு பரிபூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆகையால், பணம் பத்திரமாக வீடு செல்கிறது. மதுவிலக்கு இல்லாமல் இருந்தால், இது இவ்வளவு எளிதாக சாத்தியமாகி இருக்காது’ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நம்மூரில் மாலை ஐந்து மணிக்கே கைக்கு வரும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்து தண்ணி அடித்து விட்டு வரும் கணவனை, ‘கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன்’ என்று வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்லும் மனைவிகளுக்கு மத்தியில் – குடும்பத்துடன் வாரக் கடைசியில் ஹோட்டலில் வயிறார சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் குஜராத்தில் இருப்பது, மதுவிலக்கின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அங்கே அனேகமாக அதிகமாக ஜைனர்கள் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எல்லாமே சைவமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஹமதாபாத் - சென்னைக்கிடையே ஓடும் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அசைவம் சேர்ப்பதே இல்லை. அந்த வண்டியில் பயணம் செய்கிற சூப்பர்வைஸர், ‘காலையில் முட்டை போட்டுச் செய்யப்படும் ஆம்லெட் கூட கிடையாது’ என்று சொன்னார். காரணம், வியாபாரம் ஆகாதாம்.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, ‘தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்’ என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பவன் அரசியல்வாதி; அடுத்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன். ஆனால், தன் தாய் திருநாட்டைப் பற்றிச் சிந்திப்பவர் மோடி.

-
நன்றி: துக்ளக்- 'டிவி' வரதராஜன்


Tuesday, December 6, 2011

பிராயச்சித்தம் செய்வோமே!



* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.

* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது.

* மந்திரங்களை நாம் கூறாமல் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வழிபாட்டு நேரங்களில் மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.

* உள்ளத்தால், மனதால் பிறருக்கு உதவி செய்வதை விட உடலால் மற்றவர்களுக்கு உதவி செய்வது வாழ்க்கையில் கிடைக்கும் பெரிய புண்ணியம்.

* உடல், வாய், மனம், பணம் என்ற நான்கு வகைகளிலும், பாவம் செய்கிறோம், இதற்கு பிராயச்சித்தமாக உடலால் உதவியும், வாயால் பகவான் நாமமும், மனதால் தியானமும், பணத்தால் தர்மமும் செய்ய வேண்டும்.

* கஷ்டம், பயம், காமம், குரோதம் போன்றவை நம்மை கட்டிப்போடுகின்றன. இதுவே குடும்ப பந்தமாகும். இந்த பந்தத்திலிருந்து விடுபட்ட நிலையே மோட்சம் அல்லது முக்தியாகும்.

- காஞ்சிப்பெரியவர் 

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!


" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 



சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

 

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்குஎந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.


இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.


நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!


உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா?


அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு......

Monday, December 5, 2011

அப்பன் என்றும் அம்மை என்றும்

 இந்த பாடலை நாம் எப்பொழுது கேட்டாலும்   நமது உண்மை நிலையை எடுத்து கூறும்.

படம் : குணா

பாடியவர் : இளையராஜா
இசை அமைத்தவர் : இளையராஜா

பல்லவி 

ஓ…………ஓ…ஓ…ஓ…
அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,(1)
அது புத்தன் என்றும் சித்தன் என்றும்
பித்தன் என்றும் ஆவெதென்ன
சக்கையாக போகும் கரும்பு
ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு(2)

 அனு பல்லவி
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு...

சரணம் 1
குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா
சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்
இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு..(அப்பன் என்றும் அம்மை என்றும் (1))

சரணம் 2
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா
தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு
கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு
மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்..(அப்பன் என்றும் அம்மை என்றும் (2))

வரலாறு உன்னை வாழ்த்தட்டும்


* பிறர் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரிவதில் இருந்து தவறமாட்டார். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழக்கூடாது.

* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

* எல்லா உயிர்களும் தெய்வம் என்பது உண்மையே. ஆனால், அனைத்திலும் உயர்ந்த தெய்வம் மனிதனே.

* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்கே திருமகளின் அருள் கிடைக்கும்.

* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவு தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம். இது தூங்குவதற்கான தருணம் அல்ல.

* ஆணோ பெண்ணோ, வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தன்னம்பிக்கை தான். என்னால் இயலாது என்று சொல்பவர்கள் வரலாற்று புத்தகத்தைக் கூட தொடுவதற்கு தகுதியற்றவர்கள்.

- விவேகானந்தர்

கை கொடுப்போமா...


நவ., 15ம் தேதி,
ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊன முற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.
அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!
காரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது
"வா தாயி...' என்று உட்கார வைத்து, "உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...

"எனக்கு சொந்த ஊர் கமுதி அருகே உள்ள எருமைக்குளம். அப்பா முத்துராமலிங்கம், அம்மா கிருஷ்ணம்மாள். எங்க அம்மாதான் காட்டிலே போய் விறகு பொறுக்கி வந்து, அதை விற்று வர்ற காசுலதான் கஞ்சி காய்ச்சி, சாப்பாடு போடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. எனக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம்.

எங்க அப்பா எந்த வேலைக்கும் போனதில்ல. எப்பவும் குடிச்சுட்டு வந்து அம்மாகிட்ட தகராறு செய்து, அடிச்சுக்கிட்டே இருப்பாரு. ஒரு நாள் குடிவெறியால அம்மாவை அரிவாளால வெட்ட வந்தாரு. நான் குறுக்கே பாய்ந்து வலது கையால தடுத்தேன். கை துண்டாப் போனது மட்டு மில்லாமல், என் அம்மாவோட தலையிலும், தோள்லேயும் கூட வெட்டு விழுந்துச்சு. அப்பா ஓடிப் போயிட்டாரு.

அக்கம், பக்கம் இருந்தவங்க என்னையும், அம்மாவையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க. "முறைப்படி' கொண்டு வராததாலே, கையை திரும்ப சேர்க்க முடியாம போச்சுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும், என் அம்மாவை காப்பாத்திட்டேன். இனியும், நல்லா காப்பாத்தணுங்கிறதுனால தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன்; ஆனால், கையில காசில்லை.

பிறகு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் வழிகாட்டியதில், இப்ப நான் ராமநாத புரத்தில் உள்ள ஆஞ்சலோ காப்பகத்தில் தங்கியிருக்கேன். இங்குள்ள புனித ஆந்திரேயா பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறேன்.
அம்மா, விறகு பொறுக்கி வர்ற காசுல என்னை படிக்க வைக்கிறாங்க. ஆஞ்சலோ காப்பகம் சதானந்தம் ஐயா, ஆசிரியர் செபாஸ்டின் ஐயா ஆகியோர் எனக்கு வேணுங்கிறதை செய்து தர்றாங்க.

எதிர்காலத்துல குடிக்கறவங்களே இருக்கக் கூடாது. அதுக்கான படிப்பு படிச்சு, எல்லாரரையும் திருத்துவேன். இப்ப என்னோட ஆசை, ஆரம்பத்துல இருந்தே கை இல்லாம இருந்தா பரவாயில்லை. கை இருந்துட்டு, திடீர்ன்னு இல்லைன்னு ஆயிட்டதாலே ரொம்ப சிரமமாயிருக்கு. செயற்கை கை பத்தி நிறைய சொல்றாங்க. அதுல ஓண்ணு இலவசமா மாட்டிவிட முடியுமாங்கய்யா? " என்று சொல்லி முடித்த தனலட்சுமி யின் கேவலுக்கும், கேள்விக்கும் பதில் கொடுக்க விரும்பு பவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: சதானந்தம் - 9786713264, செபாஸ்டின்-94420 48565.